உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பைக் வீலிங் ரோமியோக்களுக்கு எச்சரிக்கை

பைக் வீலிங் ரோமியோக்களுக்கு எச்சரிக்கை

அதியமான்கோட்டை: 'பள்ளி, கல்லூரி மற்றும் சாலைகளில் அபாயகரமாக, பைக் வீலிங் செய்யும் ரோமியோக்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதியமான்கோட்டை இன்ஸ்பெக்டர் லதா எச்சரிக்கை விடுத்துள்ளார். தர்மபுரி அடுத்த, அதியமான்கோட்டை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கடந்த சில மாதங்களில் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடந்தேறியதால், பொதுமக்கள் அச்சமடைந்தனர். அதை தொடர்ந்து, பகல் மற்றும் இரவு நேரத்தில், போலீசார் ரோந்து, பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அதியமான்கோட்டை இன்ஸ்பெக்டராக, கடந்த, 19 அன்று லதா பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் கூறியதாவது:அதியமான்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளான ஒட்டப்பட்டி, சத்யாநகர், ஔவை வழி, நேருநகர், பழைய கோட்ரஸ், பெருமாள் கோவில்மேடு, தடங்கம் உள்ளிட்ட பகுதிகளில் குற்ற செயல்கள் ஏற்படாமல் தடுக்க, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், தெருக்கள் மற்றும் சாலை சந்திப்புகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும், போலீசார் பகல் மற்றும் இரவு நேரங்களில் கூடுதலாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒட்டபட்டி முதல் நல்லம்பள்ளி வரையிலான நெடுஞ்சாலையில், சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், பள்ளி கல்லூரி செல்லும் பெண்களின் பாதுகாப்பிற்கு, போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி பணியாற்றி வருகின்றனர். அதில், பள்ளி கல்லூரி, பஸ் ஸ்டாப் உட்பட பெண்கள் அதிகம் உள்ள இடங்களில், சில ரோமியோக்கள் பைக்கில் அதிவேகமாக செல்வதுடன், வீலிங் செய்து வருகின்றனர். இதனால், சாலையில் செல்லும் அப்பாவி பொதுமக்கள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, பைக்கில் வீலிங் செய்யும் ரோமியோக்கள் மீது, வழக்கு பதிவு செய்து, 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து, அத்துமீறும் நபர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ