அ.தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை
தர்மபுரி:தர்மபுரி ஒருங்கிணைந்த, அ.தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், தர்மபுரியில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட அவை தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ராஜேந்திரன் உட்பட முக்கிய நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பூக்கடை ரவி வரவேற்று பேசினார். தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் அன்பழகன், கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகன் ஆகியோர் தீர்மானங்கள் குறித்து பேசினர். தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த அ.தி.மு.க., சார்பில், தமிழக அரசு விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், மேகதாது அணை தொடர்பாக மெத்தனம் காட்டி வரும், த.வெ.க., அரசை கண்டித்தும், காவிரி பிரச்சனையில் தமிழகத்துக்கு பெறவேண்டிய பங்கு நீரை உரிய முறையில் பெற்றுத்தராத தமிழக அரசை கண்டித்தும் வரும் 14ம் காலை, 10:00 மணிக்கு தர்மபுரி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது. இதில், கட்சியின் அமைப்பு செயலாளர்கள் ராயபுரம் மனோ, திருவேற்காடு சீனிவாசன் ஆகியோர் தலைமை தாங்கவுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில், கட்சியின் மாவட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள் மற்றும் சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.