| ADDED : ஆக 17, 2024 04:08 AM
பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கெண்டேனஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட குண்டன்கொட்டாயில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள ஏரியிலிருந்து வெளியேறும் தண்ணீர், அருகில் உள்ள தடுப்பணையில் நிரம்பி வெளியேறுகிறது. இந்த கால்வாய் வழியாக செல்லும் தண்ணீரை, பல கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், இந்த தடுப்பணையில் தற்போது, மரம், செடி, கொடிகள் ஆக்கிரமித்துள்ளன. இதில் அதிக அளவில் மணல் நிரம்பியுள்ளதால் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. இதனால், கால்வாய் தண்ணீரை பயன்படுத்தி வந்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து, அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, ஆக்கிரமிப்பில் உள்ள இந்த தடுப்பணையை துார்வாரி, ஆக்கிரமித்துள்ள செடிகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.