தரமற்ற பணியால் பயன்படாத நுாலக கட்டட கழிப்பறை
தர்மபுரி, ஆக. 24- கொளகத்துாரில் உள்ள, நுாலக கட்டடத்தில் தரமற்ற பணிகளால், புதிதாக கட்டப்பட்ட கழிப்பறை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. தர்மபுரி அடுத்த, கே.நடுஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட கொளகத்துாரில், 2,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் தொகை மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில், அரசு தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி உள்ளது. இதன் அருகிலுள்ள, பொது நுாலகத்தை மாணவர்கள் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நுாலக கட்டடத்தில் மாணவர்களின் அடிப்படை வசதிகளுக்காக, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம், 2021-2022ல் நுாலக கட்டடத்தில் உள்ள, பழுதுகளை சரி செய்து, இரண்டு புதிய கழிப்பறை கட்டுவதற்கு, 1.21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்தது.தரமற்ற பணிகளால் கழிப்பறை கதவுகள் உடைந்து காணப்பட்டது. இதன் காரணமாக, இது நாள் வரை புதிய கழிப்பறையை பயன்படுத்த முடியவில்லை. எனவே, மாணவர்கள் நலன் கருதி, கழிப்பறைக்கு தரமான கதவுகள் அமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.