கல்லுாரி மாணவர்களிடமிருந்து 103 கஞ்சா பாக்கெட் பறிமுதல்
மொரப்பூர், மொரப்பூர் அருகே, வீட்டில் கஞ்சா போதையில் இருந்த, கல்லுாரி மாணவர்கள் இருவர் உட்பட, 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து, 103 கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த போடம்பட்டியை சேர்ந்தவர் நவீன்குமார், 20. பெருந்துறையிலுள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில், முதலாமாண்டு படித்து வருகிறார். இவரது பெற்றோர் திருப்பூரிலுள்ள பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர். பெற்றோருடன் வசித்து வந்த நவீன்குமார், அங்குள்ள வடமாநிலத்தவரின் அறையிலிருந்து கஞ்சாவை எடுத்துக்கொண்டு விடுமுறையில், தன் சொந்த ஊர் போடம்பட்டிக்கு வந்துள்ளார். அவருடன் கல்லுாரியில் படிக்கும், திருப்பூர் மாவட்டம், கூலிப்பாளையத்தை சேர்ந்த, 17 வயது மாணவன், தென்காசி மாவட்டம், பிரானுாரை சேர்ந்த, 16 வயது மாணவன் மற்றும் எலவடையை சேர்ந்த விக்ரம், 25, ஆகியோர் நவீன்குமார் வீட்டில் தங்கி, கஞ்சா போதையில் இருந்து வந்தனர். இது குறித்து கிராம மக்கள் அளித்த தகவலின் படி, மொரப்பூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணலீலா தலைமையிலான போலீசார், வீட்டிலிருந்த, 16 மற்றும். 17 வயதுடைய, இரண்டு மாணவர்கள், விக்ரம் ஆகிய, 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 103 பாக்கெட்டுகளில் இருந்த, 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, தலைமறைவான நவீன்குமாரை தேடி வருகின்றனர்.