மின்வேலியில் சிக்கியவர் சாவு இருவருக்கு 3 ஆண்டு சிறை
தர்மபுரி, டிச. 12-தர்மபுரி மாவட்டம், அரூரை சேர்ந்தவர் ராஜேஷ், 32, தொழிலாளி. திருமணமானவர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த திருமணமான பானுப்பிரியா, 30, என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலானது. கடந்த, 2017ல் இருவரும் திருவண்ணாமலை சென்று குடும்பம் நடத்தினர்.உறவினர்கள் அவர்களை அழைத்து வந்தனர். அதன்பின் இருவரும், 2017 ஆக., 25ல் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறி, அரூர் அருகே உள்ள சோளக்கொட்டாய் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு விவசாய நிலத்தில் இருந்த மின்வேலியில் சிக்கி ராஜேஷ் பலியானார். அதிர்ச்சியடைந்த பானுப்பிரியா, மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அரூர் போலீசார், நில உரிமையாளர் பிரகாசம், 64, மின்வேலி அமைத்து கொடுத்த அர்ஜூனன், 45 ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இறுதி கட்ட விசாரணை முடிந்த நிலையில், பிரகாசம் மற்றும் அர்ஜூனனுக்கு தலா, 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா, 25,000 ரூபாய் அபராதம் விதித்து, மாவட்ட முதன்மை நீதிபதி திருமகள் நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில், வக்கீல் முருகன் ஆஜரானார்.