அங்கன்வாடி மைய புதிய கட்டடம் பூஜையுடன் பணி துவக்கி வைப்பு
தர்மபுரி: நல்லம்பள்ளி அருகே, ஆதிதிராவிடர் காலனியில், அங்கன்வாடி மைய புதிய கட்டடத்திற்கு, தர்மபுரி பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், பாகலஹள்ளி பஞ்.,ல் ஆதிதிராவிடர் கீழ்காலனி உள்ளது. இங்கு அப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அங்கன்வாடி மையம் காட்டும் பணிகள் நேற்று தொடங்கியது. இதில், எம்.என்.ஆர்.ஜி.எஸ்., திட்டத்தில், 8 லட்சம் ரூபாய், ஐ.சி.டி.எஸ்., பங்களிப்பாக, 2 லட்சம் ரூபாய், 15வது நிதி குழு திட்டத்தில், 6.55 லட்சம் ரூபாய் என, 16.55 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதேபோல், சாக்கடை கால்வாய் அமைக்க, 15வது நிதி குழு திட்டத்தில், 3 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பூஜை நிகழ்ச்சி நேற்று நடந்தது. தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இதில், பாகலஹள்ளி பஞ்., தலைவர் முருகன், துணைத்தலைவர் ரம்யாகுமார், செயலாளர் சிவகாமி, வார்டு உறுப்பினர் அஜித் உட்பட அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.