உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / நோயாளிகளுக்கு கலப்பட ரத்தம்? ரத்த வங்கியில் அதிகாரிகள் சோதனை

நோயாளிகளுக்கு கலப்பட ரத்தம்? ரத்த வங்கியில் அதிகாரிகள் சோதனை

தர்மபுரி:தர்மபுரியில் உள்ள தனியார் ரத்த வங்கியி ல், ரத்தம் வாங்கி செலுத்திய நோயாளிகள் பலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டதால், மருந்து தரக்கட்டுப்பாட்டு அலுவலர்கள் அங்கு சோதனை நடத்தினர். தர்மபுரி அரசு மருத்துவ மருத்துவமனை அருகே, தனியார் மருத்துவமனை மாடியில், 'மீனா ரத்த வங்கி' உள்ளது. இங்கிருந்து பல்வேறு மருத்துவமனைகளுக்கு ரத்தம் அனுப்பப்படுகிறது. இந்த ரத்த வங்கியிலிருந்து ரத்தம் வாங்கி, நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டதில், பலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட ரத்த வங்கியில் பெறப்படும் ரத்தம், நீர்த்த நிலையில் வழங்குவதாகவும், அதில் கலப்படம் இருப்பதாக சந்தேகிப்பதாக, தர்மபுரி தனியார் மருத்துவமனை டாக்டர்கள் பலர், மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு புகார் அனுப்பினர். இதையடுத்து, தர்மபுரி முதுநிலை மருந்தியல் ஆய்வாளர் ராமு தலைமையில், மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளர், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு ஆய்வாளர் மற்றும் சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை பேராசிரியர் அடங்கிய மருத்துவ குழுவினர் நேற்று அந்த ரத்த வங்கியில் சோதனை நடத்தி, ரத்த மாதிரிகளை சேகரித்து சென்றனர். மருத்துவ அலுவலர்கள் கூறுகையில், 'இந்த ரத்த வங்கியில், ரத்தம் பெறும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை முறையாக பின்பற்றாதது தெரிந்துள்ளது. 'அங்கு எடுக்கப்பட்ட மாதிரிகளை சோதித்த பின் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள், கலெக்டருக்கு அறிக்கை அனுப்பப்படும். தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். 10 ஆண்டுகளுக்கு முன் உ.பி.,யில் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதுபோல தமிழகத்திலும் நடந்துள்ளதா என்பது குறித்தும் விரிவாக விசாரிக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை