பைக் மீது கார் மோதி பஞ்., தலைவர் பலி
பாப்பிரெட்டிப்பட்டி, அக். 22---தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கெளாபாறையை சேர்ந்தவர் மாரியப்பன், 67; எல்லபுடையாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வந்தார். நேற்று காலை வீட்டிலிருந்து ஊராட்சி பணி வேலையாக, தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் சென்று விட்டு, வீடு திரும்பினார். தர்மபுரி - --அரூர் சாலையில் தன் ஹீரோ ஹோண்டா புரோ பைக்கில் வந்து கொண்டிருந்தார். மதியம், 1:00 மணியளவில் ஒடசல்பட்டி சந்திப்பில், பெத்துார் வழியாக அரூர் செல்ல, கடத்துார் சாலையில் பைக்கை திருப்பினார். அப்போது, மொரப்பூரிலிருந்து தர்மபுரி நோக்கி அதிவேகமாக வந்த ரெனால்ட் கெவிட் கார், மாரியப்பன் வந்த பைக் மீது மோதியது. இதில், மாரியப்பன் படுகாயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, 108 அவசரகால ஆம்புலன்ஸ் மூலம், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் மாலை, 5:30 மணிளவில் உயிரிழந்தார். கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர். இறந்த மாரியப்பன், ம.தி.மு.க., முன்னாள் அரூர் ஒன்றிய செயலாளர். இவருக்கு, மனைவி, இரு மகன்கள் உள்ளனர்.