இரு கைகளை இழந்த மாணவனுக்கு செயற்கை கைகள் அளித்த முதல்வர்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் ஜீனுார் கிராமத்தை சேர்ந்தவர் கீர்த்திவர்மா. இரு கைகளை இழந்த மாற்றுத்திறனாளி. இவர், பிளஸ் 2 பொதுத்தேர்வில், 471 மதிப்பெண்கள் பெற்றார். இதைதொடர்ந்து, இரு கைகளையும் இழந்த, கிருஷ்ணகிரி மாணவர் கீர்த்திவர்மா, முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்ட கீர்த்திவர்மாவிற்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும், மாணவன் கீர்த்திவர்மா குடும்பத்தினருக்கு சொந்தமாக வீடு இல்லாததால், இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து, கீர்த்திவர்மா குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனை பட்டா, கனவு இல்லம் திட்டத்தில், வீடு கட்ட ஆணை வழங்கி, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் கட்டுமான பணிகளை கடந்த ஜூலை, 17-ல், துவக்கி வைத்தார். இந்நிலையில், கிருஷ்ணகிரியில் நேற்று நடந்த அரசு விழாவில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளி மாணவன் கீர்த்திவர்மாவிற்கு செயற்கை கைகளை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.அப்போது மாணவன் கூறுகையில், “செயற்கை கைகளை வழங்கி, முதல்வர் எனக்கு நம்பிக்கையை பரிசளித்திருக்கிறார்,” என்றார்.