இடிந்து விழும் நிலையில் வீடுகள் அச்சத்தில் துாய்மை பணியாளர்கள்
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் டவுன் பஞ்.,ல், பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு அரசு சார்பில், கடந்த, 1968ல், கோபாலகிருஷ்ண செட்டியார் நகர சுத்த பணியாளர் காலனியில், 26 ஓட்டு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. குடியிருப்பவர்கள், அரசுக்கு செலுத்த வேண்டிய மாத வாடகையை, அவர்களின் மாத சம்பளத்தில் அரசு பிடித்தம் செய்து வருகிறது. பணியாளர்கள் குடியிருந்து வரும் வீடுகள் கட்டப்பட்டு, 57 ஆண்டுகள் ஆவதால், கூரைக்கு பயன்படுத்திய மரங்கள் உடைந்தும், சுவர்கள் விரிசல் அடைந்த நிலையிலும் உள்ளன. இதனால், மழைக்காலங்களில் வீடுகளுக்குள் புகும் மழை நீரால், துாய்மை பணியாளர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.வீடுகளை இடித்து விட்டு, புதிதாகவோ அல்லது அதே வீடுகளை புதுப்பித்து தருமாறு, டவுன் பஞ்., நிர்வாகம், கலெக்டர், அமைச்சர் ஆகியோரிடம் துாய்மை பணியாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இடிந்து விழும் நிலையிலுள்ள குடியிருப்புகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க, துாய்மை பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.