32 செங்கல் சூளைகளை மூடி சீல் வைக்க கலெக்டர் உத்தரவு
தர்மபுரி :தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுகாவில், 32 செங்கல் சூளைகள் உரிய அரசு பதிவு பெறாமல் இயங்கி வருவது, புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்களின் புலத்தணிக்கையில் தெரியவந்ததால், இது தொடர்பாக விளக்கம் கேட்டு குறிப்பாணை வழங்கப்பட்டது. அதில், சம்மந்தப்பட்ட செங்கல் சூளை உரிமையாளர்கள், 15 தினங்களுக்குள் புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் இணையதளமான, https://mimas.tn.gov.in-ல் செங்கல் சூளை பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள், 1959-ன் படி விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. இதற்கான காலக்கெடு, செப்., 3ல் முடிவடைந்த நிலையில், அரசு அனுமதி பெற வேண்டிய விண்ணப்பத்தை, 32 செங்கல் சூளை உரிமையாளர்கள் சமர்ப்பிக்கவில்லை. இதனால், பதிவு பெறாமல் இயங்கும், 32 செங்கல் சூளைகளை மூடி, 'சீல்' வைக்க, காரிமங்கலம் தாசில்தாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.