இ.பி.எஸ்., குறித்து அவதுாறு நடவடிக்கை கோரி புகார்
கிருஷ்ணகிரி, இ.பி.எஸ்., குறித்து அவதுாறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை கோரி கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., கட்சி நிர்வாகிகளுடன் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார். அதில், அவர் தெரிவித்துள்ளதாவது: சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., பொதுச் செயலாளருமான இ.பி.எஸ்., குறித்து தரக்குறைவாக சித்தரித்து கேலி சித்திரத்தை, தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக இருக்கும் அமைச்சர் ராஜா மற்றும் எக்ஸ் தளத்தில் அவதுாறு செய்தியை பகிர்ந்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்செயல், இ.பி.எஸ்., நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது. அ.தி.மு.க.,வின் கொடியை தவறாக பயன்படுத்தியும் கேலிச்சித்திரம் வெளியிட்டுள்ளனர். இது, இரு கட்சியினர் இடையே வெறுப்பு மற்றும் மோதலை துாண்டும் வகையிலும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வகையிலும் உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.