ரூ.125 ரூபாயை கடந்து விற்பனை கொப்பரை விவசாயிகள் மகிழ்ச்சி
ஈரோடு: கொப்பரை தேங்காய் ஒரு கிலோ, இரண்டு மாதமாக, 125 ரூபாய் வரை விற்பனையாவதால், விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.கஜா புயலுக்கு பின், தேங்காய், கொப்பரை தேங்காய் விலை கடுமையாக உயரவில்லை. கிலோ, 120 ரூபாயை எட்டினாலும், சில நாளில் மீண்டும், 100 ரூபாய்க்குள் முடங்கியது.இந்தாண்டு கடந்த மாதத்துக்கு முன் வரை, ஒரு கிலோ, 75 முதல், 85 ரூபாய் வரை விற்பனையானது. இரு மாதமாக, 100 ரூபாயை கடந்து, அதிகபட்சமாக, 143.75 ரூபாய்க்கு விற்பனையானது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை சொசைட்டி, எழுமாத்துார், அவல்பூந்துறை, சிவகிரி, மொடக்குறிச்சி, கொடுமுடி மற்றும் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில், காங்கேயம் பகுதி ஒழுங்கு முறை விற்பனை கூடம், சொசைட்டிகளிலும், 125 ரூபாயை கடந்து விற்பனையாகி வருகிறது.இதுபற்றி தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு கூறியதாவது: கடந்த ஆக., 15க்கு பின் கொப்பரை விலை கிலோ, 100 ரூபாயை கடந்தது. செப்., - அக்., மாதங்களில் 125 முதல், 143 ரூபாயை எட்டியது. தற்போதும், 125 ரூபாய்க்கு குறையாமல் கொள்முதலாகிறது. பிப்., - மார்ச் மாதம் தேங்காய் சீசன் துவங்கி, கொப்பரை உற்பத்தி அதிகரிக்கும். அதுவரை தேங்காய், கொப்பரை தேங்காய்க்கு தேவை அதிகமாகவே இருக்கும். தற்போதைய விலை இன்னும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது. இவ்வாறு கூறினார்.