தென்பெண்ணையாற்று உபரி நீரை கொண்டு வரக் கோரி ஆர்ப்பாட்டம்
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வேடகட்டமடுவு பஞ்., அலுவலகம் முன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் குமரேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில், தென்பெண்ணையாற்று உபரி நீரை பாம்பாறு அணையில் இருந்து கால்வாய் மூலம் வேடகட்டமடுவு பஞ்.,ல் உள்ள விவசாய நிலங்களுக்கு கொண்டு வர வேண்டும். வேடகட்டமடுவில் உள்ள பழங்குடி மற்றும் அருந்ததி மக்களுக்கு மயான வசதி செய்து தர வேண்டும். வீடில்லாத மக்களுக்கு வீடு கட்டி கொடுப்பதுடன், வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். தெரு விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், நிர்வாகிகள் தங்கராஜ், வீரப்பன், பாம்பாறு பாசன கால்வாய் சங்கத் தலைவர் தங்கவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.