ஏரி வேலை கூலி கேட்டு 2 மாதங்களாக பி.டி.ஓ., ஆபீசுக்கு அலையும் மாற்றுத்திறனாளி
பாப்பிரெட்டிப்பட்டி :தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில், 19 ஊராட்சிகள் உள்ளன. இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி மோளையானூர் ஊராட்சிக்கு உட்பட்ட தேவராஜபாளையம், பூனையானூர், ஆகிய கிராமங்களில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளில், 600க்கும் மேற்பட்ட மக்கள் ஈடுபட்டு வருகின்றனர், இவர்களுக்கான கூலித் தொகை வாரந்தோறும் பணியாளர்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதில் நேற்று மதியம் பூனையானூர் கிராமத்தைச் சேர்ந்த பட்டு, 55, என்ற மாற்று திறனாளி. தனக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஏரி வேலை செய்த கூலி பணம் வரவில்லை என தவழ்ந்து தவழ்ந்து மாடியில் ஏறி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். அலுவலர், உங்கள் வங்கி கணக்கில் பணம் ஏறவில்லை. ஆகவே போஸ்ட் ஆபீஸ் சென்று புதிதாக கணக்கு துவங்கி புத்தகம் எடுத்து வர திருப்பி அனுப்பி விட்டார். இதனால் பட்டு சோகத்துடன் திரும்பினார்.