லாரி கவிழ்ந்து டிரைவர் பலி சாலையில் ஆறாக ஓடிய பீர்
அரூர்:அரூர் அருகே, டாரஸ் லாரி கவிழ்ந்ததில், டிரைவர் பலியானார். லாரியில் ஏற்றி வந்த, 'பீர்' பாட்டில்கள் உடைந்து, சாலையில், மது ஆறாக ஓடியது. திருவள்ளூரில் இருந்து, சேலத்திலுள்ள டாஸ்மாக் குடோனுக்கு, 6.51 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 'பீர்' பாட்டில்களை ஏற்றிய டாரஸ் லாரி ஒன்று நேற்று சென்றது. லாரியை கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே இனாம்காட்டுப்பட்டியை சேர்ந்த பழனிசாமி, 31, ஓட்டினார். மாலை, 4:00 மணிக்கு, அரூர் - திருப்பத்துார் தேசிய நெடுஞ்சாலையில், மோப்பிரிப்பட்டி அருகே, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலை நடுப்புற சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில், லாரி அடியில் சிக்கிய டிரைவர் பழனிசாமி, சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவ இடம் வந்த அரூர் டி.எஸ்.பி., கரிகால் பாரிசங்கர் விசாரணை மேற்கொண்டார். அரூர் தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் இணைந்து, கிரேன் உதவியுடன், லாரி அடியில் சிக்கிய டிரைவர் பழனிசாமியின் உடலை மீட்டனர். இந்த விபத்தில், டாரஸ் லாரியில் கொண்டு வரப்பட்ட ஏராளமான, 'பீர்' பாட்டில்கள் உடைந்து, சாலையில், பீர் ஆறாக ஓடியது. அரூர் போலீசார், அங்கிருந்த மக்கள் 'பீர்' பாட்டில்களை எடுத்து செல்வதை தடுத்து, எஞ்சிய 'பீர்' பாட்டில்களையும், லாரியையும் அப்புறப்படுத்தினர்.