விபத்தில் மூளைச்சாவு அடைந்த முதியவர் உடல் உறுப்புகள் தானம்
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த நந்திமங்கலம் அருகே, பெருமாள்பள்ளியை சேர்ந்தவர் முனிராஜ், 76. கடந்த, 11ம் தேதி காலை, 8:30 மணிக்கு, பெருமாள்பள்ளி கேட் அருகே டி.வி.எஸ்., மொபட்டில் சென்றபோது, அவ்வழியாக வந்த பிக்கப் வாகனம், மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முனிராஜ், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார். அன்றைய தினம் அவரது கண்களை, குடும்பத்தினர் தானமாக வழங்கினர். அதன்பின் நேற்று அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட வழங்கல் அலுவலர் கீதாராணி மற்றும் வட்ட வழங்கல் தாசில்தார் பாலாஜி ஆகியோர், மலர் வளையம் வைத்து, அரசு சார்பில் மரியாதை செலுத்தினர்.