ஆக்கிரமிப்பில் இருந்த வீ.வ.வாரிய நிலம் மீட்பு
தர்மபுரி :தர்மபுரி-யில், சேலம் சாலையில், நல்லம்பள்ளி ஒன்றியம் ஏ.ஜெட்டிஅள்ளி பஞ்., அவ்வைவழி அருகே, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில், வீடுகள் கட்டும் தேவைக்காக, கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன், விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலத்துக்கான இழப்பீட்டு தொகையை சம்மந்தப்பட்டவர்கள் பெற்றுக் கொண்டனர். இருந்த போதிலும், அந்த இடத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து ஓட்டல், பேக்கரி, பழக்கடை உள்ளிட்ட கடைகளை நடத்தி வந்தனர். இக்கடைகளை அகற்றுமாறு, வீட்டுவசதி வாரியம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும், கடை உரிமையாளர்கள் அகற்றவில்லை. இந்நிலையில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஓசூர் பிரிவு செயற்பொறியாளர் பாண்டியராஜன் தலைமையிலான குழுவினர், நேற்று போலீஸ் பாதுகாப்புடன், ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்த நிலத்தை மீட்டனர்.