சாமந்தி பூ விலை சரிவு விவசாயிகள் கவலை
சாமந்தி பூ விலை சரிவுவிவசாயிகள் கவலைஅரூர், அக். 18-தர்மபுரி மாவட்டம், அரூர், தீர்த்தமலை, நரிப்பள்ளி, மொரப்பூர், கம்பைநல்லுார் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில், 1,500க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் சாமந்தி பூவை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் சாமந்தி பூ விலை சரிவடைந்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து, அவர்கள் கூறியதாவது: ஆயுத பூஜை பண்டிகையின் போது, ஒரு கிலோ சாமந்தி பூ, 200 ரூபாய் வரை விற்றது. அதன்பின் விலை குறைந்து தற்போது கிலோ, 40 ரூபாய்க்கு விற்கிறது. இதை வாங்குவதற்கும் ஆளில்லை. மேலும், தொடர் மழையால் செடிகளில் சாமந்தி பூ அழுகி விட்டது. உழவு செய்தல், நாற்று, பூச்சி மருந்து என ஏக்கருக்கு, ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் செலவிடப்பட்டுள்ளது. தற்போது கிலோ, 40 ரூபாய்க்கு விற்பதால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பூக்களை அறுவடை செய்யும் கூலி, அதை கொண்டு செல்ல போக்குவரத்து செலவு, இதை கணக்கில் கொண்டு சாமந்தி பூக்களை அறுவடை செய்யாமல், தோட்டத்திலேயே விவசாயிகள் விட்டுள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.