உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மானிய விலை டிராக்டர் பெற தி.மு.க., ஒன்றிய செ., பரிந்துரை அவசியம் அதிகாரிகள் மீது விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார்

மானிய விலை டிராக்டர் பெற தி.மு.க., ஒன்றிய செ., பரிந்துரை அவசியம் அதிகாரிகள் மீது விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார்

தர்மபுரி, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பரிந்துரை இருந்தால் தான், மானிய விலை டிராக்டர் வழங்கப்படும் என, தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறுகின்றனர்' என, குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று, விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம், கலெக்டர் சதீஸ் தலைமையில் நடந்தது. இதில், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் பேசுகையில், 'கரும்பில் வேர்ப்புழு தாக்குதலால், நடவு செய்த வயல்களில் பெரும்பகுதி அழிந்து விட்டது. வேர்ப்புழு தாக்குதலால் பாதித்த கரும்பு விவசாயிகள் குறித்து, முறையாக கணக்கெடுப்பு செய்து, இழப்பீடு வழங்க வேண்டும். தர்மபுரியில் சிப்காட் அமைக்க, நல்லம்பள்ளி தாலுகாவில், 924 ஏக்கர் மேய்ச்சல் தரை புறம்போக்கு நிலம் எடுக்கப்பட்டது. அதற்கு மாற்றாக வெறும், 200 ஏக்கர் மட்டும், பென்னாகரம் தாலுகா பவளந்துாரில் ஒதுக்கப்பட்டுள்ளது. நல்லம்பள்ளி தாலுகாவில் இருந்து, 50 கி.மீ., துாரத்திலுள்ள நிலத்தில், கால்நடைகளை மேய்க்க செல்ல முடியுமா. எனவே, நிலம் கையகப்படுத்தப்பட்ட நல்லம்பள்ளி பகுதியிலேயே மேய்ச்சல் தரை நிலம் ஒதுக்க வேண்டும்.சிப்பம் கட்டும் அறை, மானிய விலையில் டிராக்டர், மினி டிராக்டர் ஆகியவற்றை வழங்க கோரினால், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள், ஒன்றியக்குழு தலைவர் ஆகியோர் பரிந்துரை செய்தவர்களுக்கு தான் கொடுக்க வேண்டும் என, தமிழக வேளாண் அமைச்சரின் உதவியாளர் சொல்லி விட்டார். எனவே, இந்தாண்டு வாய்ப்பில்லை என, மொரப்பூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கூறுகிறார். சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரையில் அமைக்கப்பட்டுள்ள இணை மின்திட்டத்தில் விவசாயிகளுக்கு, 190 ரூபாய் என்ற மதிப்பு கொண்ட பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மாறாக, விவசாயிகளை இத்திட்டத்தில் பங்குதாரர்களாக இணைத்துக் கொள்ள வேண்டும். கால்நடைத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் ஆம்புலன்ஸ் சேவையை மாலை, 5:00 மணிக்கு பிறகும் செயல்படுத்த வேண்டும்' என்றனர்.இதற்கு பதிலளித்த கலெக்டர் சதீஸ், ''சர்க்கரை ஆலை நிர்வாகம், வேளாண் துறை மற்றும் வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து கரும்பு பயிரில் வேர்ப்புழு தாக்குதல் தொடர்பாக விவசாயிகளுக்கு அடிக்கடி விழிப்புணர்வு ஏற்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கப்படும். படிப்படியாக, மாற்று மேய்ச்சல் நிலம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சர்க்கரை ஆலை மின் திட்டத்தில் விவசாயிகளை பங்குதாரர்களாக சேர்ப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். பணியாளர்கள் பற்றாக்குறையால் மாலை, 5:00 மணிக்கு பின் கால்நடை ஆம்புலன்ஸ்களை இயக்க முடியாத நிலை உள்ளது,'' என்றார்.இது குறித்து மொரப்பூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ராஜேஷ் கண்ணா கூறுகையில், ''விவசாயிகளிடம், அது போன்று எதுவும் நான் கூறவில்லை. சிப்பம் கட்டும் அறை டார்கெட் இல்லை. டிராக்டர், மினி டிராக்டர் வேளாண் பொறியியல் துறை மூலம் தான் வழங்கப்படுகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை