உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வெள்ளத்தால் போக்குவரத்து துண்டிப்பு கஞ்சி குடித்து பசியாறும் மலைவாழ் மக்கள்

வெள்ளத்தால் போக்குவரத்து துண்டிப்பு கஞ்சி குடித்து பசியாறும் மலைவாழ் மக்கள்

அந்தியூர், சபர்கூர்மலையில் தமிழக-கர்நாடக எல்லையில், பாலாற்று வெள்ளத்தால் கிராமத்தில் சிக்கிக்கொண்ட, 900க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள், கஞ்சியை மட்டும் குடித்து பசியாறி வருகின்றனர்.ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே பர்கூர் மலையில், தமிழக-கர்நாடக எல்லை பகுதியில் குட்டையூர் மற்றும் வேலம்பட்டி உள்ளது. குட்டையூரில், 125க்கும் மேற்பட்ட குடும்பம், வேலம்பட்டியில் 60க்கும் மேற்பட்ட குடும்பம், மட்டிமரத்தள்ளியில் 20க்கும் மேற்பட்ட குடும்பம் என, 900க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.நான்கு நாட்களாக கேர்மாளம், குன்றி, கடம்பூர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், இப்பகுதியில் செல்லும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பிற பகுதிக்கு செல்ல முடியாமல் நான்கு நாட்களாக மூன்று கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் தவிக்கின்றனர். வெங்காயம், மிளகாய் தீர்ந்து விட்டதால், சாம்பார், ரசம் வைக்க முடியாத நிலையில், ரேஷனில் வாங்கிய அரிசியை கொண்டு கஞ்சி மட்டும் வைத்து குடித்து வருகின்றனர்.இந்நிலையில் கோபி சப்-கலெக்டர் சிவானந்தம், அந்தியூர் தாசில்தார் இளஞ்செழியன், ஆர்.ஐ., அருணா, வி.ஏ.ஓ.,க்கள் பாபு, தமிழரசன், உதவியாளர் செல்வம் மற்றும் வருவாய் துறையினர் அப்பகுதியில் ஆய்வு நடத்தினர். மறுகரையில் இருந்து போட்டோ, வீடியோ எடுக்க மட்டுமே முடிந்தது. வெள்ளத்தின் சத்தத்தில் அதிகாரிகளோ, மக்களோ தகவலை பரிமாறிக் கொள்ள முடியவில்லை. வேலம்பட்டி, மட்டிமரத்தள்ளி பகுதியிலும் ஆய்வு செய்தனர்.ஆற்றில் இழுத்து செல்லப்பட்ட விவசாயிஇதே பகுதியை சேர்ந்த விவசாயி அல்லா பாஷா, 45, கர்நாடக மாநில எல்லையில், பெரிய செட்டியூரில் தனது மாடுகளுக்கு தீவனம் போட ஆற்றை கடந்து சென்றார். சில அடி நடந்த நிலையில், வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டார். அப்பகுதியில் நின்றிருந்தவர்கள், 100 மீட்டர் துாரம் இழுத்து சென்ற அல்லா பாஷாவை கயிறு கட்டி மீட்டனர். தொடர்ந்து கனமழை பெய்து, வெள்ளம் வடியாமல் இருந்தால், அப்பகுதி மக்கள் வெளியேற வழியே இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி