10 கடைகளுக்கு ரூ.15,000 அபராதம் உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை
தர்மபுரி :தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் தலைமையில், ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால், சரண், அருண் உள்ளிட்ட குழுவினர், தர்மபுரி பஸ் ஸ்டாண்ட், நான்கு ரோடு, நாச்சியப்ப கவுண்டர் தெரு, பென்னாகரம் ரோடு, சோகத்துார் உள்ளிட்ட பகுதியிலுள்ள மளிகை, பேக்கரி, ஓட்டல்கள், பெட்டி மற்றும் டீ கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், ஒரு ஓட்டலில் அழுகிய தக்காளி, எலி கடித்த தக்காளி என, 25 கிலோ, டீ கடை, பேக்கரியில் கலப்பட டீ துாள், 4 கிலோ, பாஸ்ட் புட் கடையில் செயற்கை நிறம் ஏற்றப்பட்ட கோழி இறைச்சி, 2 கிலோ, சமைத்த இறைச்சி, ஒரு கிலோ, காளிப்ளவர் பக்கோடா, காலாவதியான குளிர்பானங்கள், உரிய விபரம் அச்சிடாத தின்பண்டங்கள், தடை செய்த பிளாஸ்டிக் கவர்கள், 4 கிலோ ஆகியவை, பறிமுதல் செய்யப்பட்டன. இதில், 5 கடைகளுக்கு தலா, 2,000 ரூபாய், 5 கடைகளுக்கு தலா, 1,000 ரூபாய் என, மொத்தம், 10 கடைகளுக்கு, 15,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.