நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் விற்பனைக்கு குவிக்கப்படும் சிலைகள்
ஓசூர், தமிழக எல்லையான ஓசூர், தேன்கனிக்கோட்டையில், மும்பைக்கு இணையாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழா நாளை (ஆக.27) கொண்டாடப்படும் நிலையில், 1,300க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. ஹிந்து அமைப்பினர் மற்றும் இளைஞர்கள், விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய பிரமாண்ட செட் அமைத்து வருகின்றனர். இதுதவிர வீடுகளில், மக்கள் வழிபட விநாயகர் சிலைகளை வாங்கி வருகின்றனர். கடைசி நேர விற்பனைக்காக, ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் விநாயகர் சிலைகளை வியாபாரிகள் வாங்கி குவித்துள்ளனர். அவற்றை மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இதுதவிர, பூஜை பொருட்கள் வாங்க நேற்று முதலே மக்கள் ஆர்வம் காட்ட துவங்கி உள்ளனர்.பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளை, 3ம் நாளிலிருந்து நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என, விழா குழுவினரிடம் போலீசார் அறிவுறுத்தினர். மேலும், ஹிந்து அமைப்புகள் சார்பில் ஓசூர், பென்னங்கூர், மதகொண்டப்பள்ளி பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் வரும், 31ம் தேதி நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன. இதையொட்டி கடந்த, 23ம் தேதி ஓசூர் பகுதியிலும், மதகொண்டப்பள்ளி, தளி பகுதியில் நேற்று முன்தினமும், மாவட்ட எஸ்.பி., தங்கதுரை நேரில் ஆய்வு செய்து, எந்த பிரச்னையும் இல்லாமல் விநாயகர் சிலைகளை கரைக்க, போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.