உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஒகேனக்கல் கூட்டு குடிநீர் 2ம் கட்ட திட்டத்திற்கு ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிறுவன குழு கள ஆய்வு

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் 2ம் கட்ட திட்டத்திற்கு ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிறுவன குழு கள ஆய்வு

தர்மபுரி, டிச. 12-தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், 2,000 கோடி ரூபாய் மதிப்பில், ஜப்பான் நாட்டு நிதியுதவி மூலம் கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பாட்டில் உள்ளது. இருப்பினும் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இதுவரை முழுமையாக தேவையான அளவிற்கு குடிநீரை கொண்டு சேர்க்க முடியவில்லை. வளர்ந்து வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு, ஒகேனக்கல் கூட்டு குடிநீர், 2.0 திட்டம், 7,890 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது.ஒகேனக்கல் கூட்டு குடிநீர், 2ம் கட்ட திட்டத்தை செயல்படுத்த, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிறுவனம் நிதி உதவி செய்ய உள்ளது.இதன் மூலம், தர்மபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து ஊரக பகுதிகளுக்கும் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிறுவனமும், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு ஜல்ஜீவன் திட்டம் மூலம், நிதியுதவி வழங்க உள்ளது. இதற்கான கள ஆய்வுப்பணி கடந்த, 3 நாட்களாக தர்மபுரி மாவட்டத்தில் நடக்கிறது. இதில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனை, பள்ளிகள் என, பல இடங்களில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிறுவனத்தின் வாட்டரு, கோயமு தலைமையிலான, 5 பேர் அடங்கிய குழுவினர், குடிநீர் தேவை, நிலத்தடிநீரிலுள்ள புளோரைடு பாதிப்பு குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தனர்.நேற்று நல்லம்பள்ளி அடுத்த, ஏலகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, குடிநீர் தேவை மற்றும் புளோரைடு பாதிப்பு குறித்து, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கேட்டறிந்தனர். அப்‍போது, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட நிர்வாக பொறியாளர் பாலசுப்ரமணியம், உதவி செயற்பொறியாளர் பாக்கியா, சி.இ.ஓ., ஜோதிசந்திரா, தலைமை ஆசிரியர் தங்கவேல் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ