வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டியில், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல், சார்பு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. இதில், 65 வக்கீல்கள் பணியாற்றி வருகின்றனர். இங்குள்ள நீதிமன்றங்கள் கடந்த, 2008ல் தொடங்கி, 17 ஆண்டுகளாக தனியார் கட்டடத்தில் எவ்வித வசதிகளுமின்றி செயல்பட்டு வருகிறது. இதனால், வழக்கு சம்பந்தமாக வரும் மக்கள், போலீசார் கடும் அவதி அடைந்து வருகின்றனர். நீதிமன்றம் கட்டடம் கட்ட, நீதி மற்றும் வருவாய் துறை மூலம் இடம் தேர்வு செய்யப்பட்டது. இருந்த போதிலும், இதுவரை கட்டடம் கட்ட நிதி ஒதுக்கவில்லை.வக்கீல் சங்கத்தினர் பலமுறை அதிகாரிகள், அமைச்சர்கள் மூலம், அரசிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, விரைவாக நீதிமன்ற கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வக்கீல்கள் நேற்று கோர்ட் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் வழக்கு பணிகள் நடக்காமல் பாதிக்கப்பட்டன. வழக்கு சம்பந்தமாக வந்த மக்கள் திரும்பிச் சென்றனர். இதனால் நீதிமன்ற வளாகம் வெறிச்சோடியது. தொடர்ந்து வரும், 7ம் தேதி வரை கோர்ட் புறக்கணிப்பில், வக்கீல்கள் ஈடுபட உள்ளதாக, வக்கீல் சங்கத்தினர் தெரிவித்தனர்.