கிணற்றில் விழுந்த சிறுத்தை எஸ்கேப் தர்மபுரி அருகே மக்கள் பீதி
மாரண்டஹள்ளி: தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை அடுத்த, மொரப்பூர் காப்புக்காடு வனப்பகுதியில் இருந்து யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட விலங்குகள், உணவு மற்றும் தண்ணீர் தேடி, அருகேயுள்ள ஊருக்குள் வருவது வழக்கம்.இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே, சந்திராபுரம் பகுதியை சேர்ந்த விவசாயி மாதனின், 40 அடி ஆழ கிணற்றில், நேற்று உறுமல் சத்தம் கேட்டது. அப்பகுதி மக்கள் சென்று பார்த்தபோது, ஒரு சிறுத்தை கிணற்றின் பக்கவாட்டு பாறை இடுக்கில் இருப்பது தெரிந்தது. வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் செல்லும் முன் கிணற்றில் இருந்து தப்பிய சிறுத்தை, அருகிலுள்ள காப்புக்காட்டிற்குள் சென்று விட்டது. இந்த தகவல் பரவியதால், சுற்றுவட்டார பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். பாலக்கோடு வனச்சரக அலுவலர் நடராஜ் தலைமையிலான வனத்துறையினர், வனத்தை ஒட்டிய பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்பகுதி மக்கள் இரவில் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.