போலீஸ் ஸ்டேஷன் முன், தன் கழுத்து, கை, மார்பில் கத்தியால் அறுத்துக் கொண்ட நபர்
பாப்பிரெட்டிப்பட்டி, மனைவியிடமிருந்து தன் குழந்தையை மீட்டு தரக்கோரி, போதை டிரைவர், கடத்துார் போலீஸ் ஸ்டேஷன் முன், தன் கழுத்து, கை, மார்பில் கத்தியால் அறுத்துக் கொண்டார்.தர்மபுரி மாவட்டம், கடத்துார் அடுத்த தா.அய்யம்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம்,27; லாரி டிரைவர். இவரது மனைவி பிரியா, 23. இவர்களுக்கு, 6 மாத ஆண் குழந்தை உள்ளது. மாணிக்கம் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து, தகராறில் ஈடுபட்டதால், தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் பிரியா கோபித்துக் கொண்டு, குழந்தையுடன் தன் தாய் வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் இரவு அங்கு குடிபோதையில் சென்ற மாணிக்கம், குழந்தையை எடுத்துக் கொண்டு தன் வீட்டிற்கு வந்து விட்டார். பிரியா புகார் படி, கடத்துார் போலீசார் அய்யம்பட்டி கிராமத்திற்கு சென்று, குழந்தையை மீட்டு, பிரியாவிடம் ஒப்படைத்தனர்.நேற்று விசாரணைக்காக கடத்துார் போலீஸ் ஸ்டேஷன் வந்த மாணிக்கம், தன் குழந்தையை தன்னிடம் தருமாறு போலீஸ் ஸ்டேஷன் முன், போதையில் சத்தம் போட்டார். இதை போலீசார் கண்டு கொள்ளவில்லை. கோபமடைந்த மாணிக்கம், சிறிய கத்தியால் தன் கை, மார்பு, கழுத்து பகுதியில் அறுத்து கொண்டு கூச்சலிட்டார். இதனால் மாணிக்கம் உடலிலிருந்து ரத்தம் கொட்டியது. இதை பார்த்த உறவினர்கள், அவரை மீட்டு, கடத்துார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.