உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பஞ்சப்பள்ளி அணை உபரி நீரை பகிரும் பேச்சுவார்த்தை தோல்வி

பஞ்சப்பள்ளி அணை உபரி நீரை பகிரும் பேச்சுவார்த்தை தோல்வி

தர்மபுரி,ஜெர்தலாவ் கால்வாயில் வரும், பஞ்சப்பள்ளி சின்னாறு அணை உபரி நீரை தங்கள் பகுதிக்கு ஏரிகளுக்கு நிரப்புவதில் கடகத்துார் பகுதி விவசாயிகள் மற்றும் பாப்பாரப்பட்டி- இண்டூர் பகுதி, (17 ஏரிகள்) விவசாயிகளுக்கிடையில் பிரச்னை உள்ளது. இருதரப்பினருக்கும் இடையே உடன்பாடு ஏற்படுத்த தர்மபுரி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., காயத்ரி, பாப்பிரெட்டிப்பட்டி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கணேசன், உதவி பொறியாளர் மாலதி மற்றும் டி.எஸ்.பி., சிவராமன் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.இதில், கடகத்துார், சோகத்துார் மற்றும் ராமக்காள் ஏரிகள் முழுமையாக நிரம்பிய பின், பாப்பாரப்பட்டி பகுதி ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். அதுவரை பாப்பாரப்பட்டி பகுதி ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று தர்மபுரி பகுதி விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைத்தனர். ஜெர்தலாவ் கால்வாயில் தற்போது, வரும் உபரிநீர் வரத்து நிலவரப்படி தண்ணீர் வந்தால், தர்மபுரி பகுதி ஏரிகள் நிரம்ப, 2 மாதங்களுக்கு மேலாகும். அதுவரை உபரிநீர் வரும் என்று உறுதியாக சொல்ல முடியாது. ஏற்கனவே, கடந்த, 2022ல் ஜெர்தலாவ் கால்வாயில் தண்ணீர் பகிர்ந்து கொள்வது தொடர்பாக அப்போதைய ஆர்.டி.ஓ., சித்ரா ஜெர்தலாவ் கிளை கால்வாய் பிரியும் இடமான எர்ரண அள்ளி பகுதியில் நேரடியாக ஆய்வு செய்து, தர்மபுரி பகுதி ஏரிகளுக்கு, 70 சதவீதம், பாப்பாரப்பட்டி- இண்டூர் பகுதி ஏரிகளுக்கு, 30 சதவீதம் வீதம் தண்ணீரை ஒரே நேரத்தில், 2 பகுதிக்கும் திறந்து விட உத்தரவிட்டார். அதையே தற்போதும் அமல்படுத்த, பாப்பாரப்பட்டி தரப்பு விவசாயிகள் வலியுறுத்தினர்.இருதரப்பினரும் அதிகாரிகள் முன்னிலையில், காரசாரமாக வாக்குவாதம் செய்து அமளியில் ஈடுபட்டனர். பின், இரு தரப்பிலிருந்தும் தலா, 5 பேர் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடந்தது. இதில், உடன்பாடு ஏற்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ