கட்டட வசதியின்றி பொ.மல்லாபுரம் நுாலகம்
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இம் மக்கள் வசதிக்காக கிளை நுாலகம், 1962, ஏப்., 3ல் தொடங்கப்பட்டது. இதில், 34,000 புத்தகங்கள் உள்ளன. 150க்கும் மேற்பட்ட புரவலர்கள் உள்ளனர். பொ.மல்லாபுரம், பண்டாரசெட்டிப்பட்டி, புது ஒட்டுப்பட்டி, பில்பருத்தி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும், 200க்கும் மேற்பட்ட வாசகர்கள் படிக்க வருகின்றனர். 50 பட்டதாரிகள் போட்டி தேர்வுகளுக்கு தினமும் படிக்கின்றனர். இங்கு வரும் வாசகர்களுக்கும், போட்டி தேர்வுகளுக்கு தயாராக வருபவர்களுக்கும் எவ்வித அடிப்படை வசதியும் இல்லை. அமர்ந்து படிக்க போதுமான இருக்கை வசதி இல்லை. கழிவறை வசதி இல்லை. சிறிய கட்டடத்தில் இயங்குவதால் புத்தகங்கள் வைக்க இடமில்லாமல் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இட நெருக்கடி உள்ளது. கட்டடம் பழுதாகி மழைக்காலங்களில் கூரையிலிருந்து கசியும் மழை நீரால், புத்தகங்கள் நனைந்து வீணாகிறது. இதனால் தினமும் வாசகர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். புதிய கட்டடம் மாற்றிடத்தில் கட்ட, அதிகாரிகளிடத்திலும், அரசியல்வாதிகளிடமும், பலமுறை இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. வாசகர்கள் கோரிக்கைகளை ஏற்று விரைந்து புதிய கட்டடம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பேரூராட்சி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.