வனத்துறையினரை முற்றுகையிட்ட மக்கள்
பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் அடுத்த மயிலாபூர் மலையடிவாரத்தில், 100க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள சர்வே எண். 226, 227ல் உள்ள பகுதிகளில் விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது வனத்துறையினர், அப்பகுதி நிலங்களில் செடிகள் நடுவதற்காக பொக்லைன் மூலம் கடந்த இரண்டு நாட்களாக குழி தோண்டி வருகின்றனர். அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று குடியிருப்பு பகுதியில், செடிகள் நட வந்த வனத்துறையினரை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:எங்கள் மூதாதையர் காலத்தில் இருந்து, இந்த பகுதியில் விவசாயம் செய்தும், ஆடு, மாடுகள் வளர்த்தும் பிழைத்து வருகிறோம். மலைப்பகுதியை மேய்ச்சல் நிலமாகவும், விளை நிலங்களாகவும் பயன்படுத்தி வந்த நிலையில், பட்டா வழங்க பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. வனத்துறை அமைச்சரிடமும் மனு வழங்கினோம். எங்களுக்கு பட்டா கொடுக்காமல், எந்த தகவலும் தெரிவிக்காமல் வருவாய்த்துறை மூலம், இந்த பகுதியை வனத்துறைக்கு சொந்தமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. வனத்துறையினர் எங்களை இங்கிருந்து காலி செய்யும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர். குழந்தைகளின் கல்வி, எதிர்காலம் கேள்விகுறியாக உள்ளது. வனத்துரையினரின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தவும், எங்களுக்கு உரிய நிலத்திற்கு பட்டா வழங்கவும் வேண்டும்.இவ்வாறு கூறினர்.