உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / விபத்து ஏற்படுத்திய லாரியை சிறைபிடித்த மக்கள்

விபத்து ஏற்படுத்திய லாரியை சிறைபிடித்த மக்கள்

நல்லம்பள்ளி, நல்லம்பள்ளி பஸ் ஸ்டாப்பில், ஸ்கூட்டர் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய, டிப்பர் லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.தர்மபுரி மாவட்டம், நாகர்கூடல் பஞ்.,ல் இருந்து, நல்லம்பள்ளிக்கு கிராவல் மண் லோடு ஏற்றிய டிப்பர் லாரி, நேற்று மதியம், 1:30 மணிக்கு வந்தது. லாரி நல்லம்பள்ளி பஸ் ஸ்டாப் பகுதியில் இடதுபுறம் திரும்பியது. அப்போது, அவ்வழியாக தர்மபுரி நோக்கி, ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் வந்த, அதியமான்கோட்டை அருகே, பச்சியப்பன்கொட்டாயை சேர்ந்த அரசு டவுன் பஸ் கண்டக்டர் அனுமந்தன், 57, என்பவர் மீது மோதியது. இதில், அனுமந்தன் சிறு காயங்களுடன் தப்பினார். ஸ்கூட்டர், லாரி டயரில் சிக்கி நசுங்கியது. விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரியை அப்பகுதி மக்கள் சிறைபிடித்தனர். மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில், கனரக வாகனங்கள் அதிவேகமாக இயக்கியதை கண்டித்ததுடன், டிரைவரை கைது செய்ய கோரிக்கை விடுத்தனர்.இதனால், சேலம்-தர்மபுரி சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதியமான்கோட்டை போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதையடுத்து, சிறைபிடித்த லாரியை பொதுமக்கள் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ