அரசு புறம்போக்கு நிலம் மீட்க வலியுறுத்தி மறியல்
பாலக்கோடு: பாலக்கோடு அடுத்த செக்கொடி பஞ்.,ல் அரசு புறம்போக்கு ஆக்கிரமிப்பு நிலங்கள், மேய்ச்சல் தரை என பல ஏக்கர் நிலம் உள்ளது. இவற்றை, இதே பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்திருந்தனர். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, கால்வாய், குளம் போன்ற பணிகளை செய்ய இடமின்றி இருந்தது. செக்கோடியை சேர்ந்த கிராம மக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரியும், அரசு புறம்போக்கு நிலங்கள், மேய்ச்சல் தரை போன்றவற்றை தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில், குளங்கள் வெட்ட ஒதுக்க, மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்திருந்தனர்.இதை ஆய்வு செய்த கலெக்டர் சாந்தி, ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்டு, பணிக்கு பயன்படுத்த உத்தரவிட்டார். ஆனால், ஆக்கிரமிப்பு செய்தவர்கள் நிலத்தை ஒப்படைக்கவில்லை. இதனால், இப்பகுதியை சேர்ந்த பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பாப்பாரப்பட்டி போலீசார் மற்றும் பாலக்கோடு தாசில்தார் ரஜினி உள்ளிட்டோர், மறியல் செய்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, வருவாய்த்துறை அதிகாரிகள் நேரடியாக சென்று ஆக்கிரமிப்பு செய்த நிலத்தில் அளவீடு செய்து, தேசிய ஊரக பணியாளர்கள் பணியாற்ற இடத்தை ஒதுக்கீடு செய்து கொடுத்தனர்.