அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்காத தனியார் பஸ் பறிமுதல்
அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்காத தனியார் பஸ் பறிமுதல்பாலக்கோடு, நவ. 6-பாலக்கோட்டில் இருந்து, கிருஷ்ணகிரி வழித்தடத்தில் இயக்காத தனியார் பஸ் பறிமுதல் செய்யப்பட்டது.தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில் இருந்து, கிருஷ்ணகிரி மற்றும் கிருஷ்ணகிரி வழியாக, ஓசூருக்கு தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில், ஒரு தனியார் பஸ் மட்டும், கடந்த சில மாதங்களாக இரவு நேரத்தில், கிருஷ்ணரி வழித்தடத்தில் இயக்குவதை தவிர்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த செப்., 27 அன்று கிருஷ்ணகிரி செல்ல வேண்டி அருணா என்ற பெண் குறிப்பிட்ட தனியார் பஸ்சில் ஏறினார்.ஆனால், அதன் ஓட்டுனர் பஸ்சை பாலக்கோடு பஸ் ஸ்டாண்ட் கடந்தவுடன் அருகிலுள்ள, பெட்ரோல் பங்க்கில் நிறுத்திவிட்டு, இனிமேல் பஸ் போகாது என, அந்த பெண்ணை கீழே இறக்கி விட்டார். இதில், ஆத்திரமடைந்த பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பாலக்கோடு இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம், பஸ் ஓட்டுனரை கண்டித்து இனி இது போல் செயல்பட கூடாது என எச்சரித்தார். தொடர்ந்து அதேபோல், சம்மந்தப்பட்ட தனியார் பஸ் கிருஷ்ணகிரி வழித்தடத்தில் இயக்கப்படாதது குறித்து, பயணிகள் மாவட்ட கலெக்டர் சாந்திக்கு புகார் அனுப்பினர். இதையடுத்து, ஆர்.டி.ஓ., தாமோதரன் உத்தரவின்படி, பாலக்கோடு பிரேக் இன்ஸ்பெக்டர் வெங்கிடுசாமி, நேற்று தனியார் பஸ்சை பறிமுதல் செய்து, அபராதம் விதிக்க, மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.மேலும், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில், இயக்காத தனியார் பஸ் உரிமையாளர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, பிரேக் இன்ஸ்பெக்டர் வெங்கிடுசாமி தெரிவித்தார்.