உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / உபரிநீர் வெளியேறும் பகுதியில் சிறு பாலம் கேட்டு தர்ணா

உபரிநீர் வெளியேறும் பகுதியில் சிறு பாலம் கேட்டு தர்ணா

நல்லம்பள்ளி, தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், பாலஜங்கமனஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட கிட்டன்கொட்டாய் கிராமத்தில், 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு, 200 ஏக்கர் விவசாய விளைநிலங்கள் உள்ளன. இக்கிராம மக்கள் ரங்கயன் ஏரி, உபரி நீர் வெளியேறும் பகுதியை கடந்து சென்று, ஏரிக்கரை மீதுள்ள மண் சாலை வழியாக, கிட்டன்கொட்டாய் கிராமத்திற்கு சென்று வருகின்றனர். கடந்த மாதம் பெய்த கனமழையால், ரங்கயன் ஏரி நிரம்பி, உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால், தற்போது கிட்டன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த மக்கள், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ-, மாணவியர் தினமும் உபரிநீர் வெளியேறும் பகுதியை அபாயகரமான நிலையில் கடந்து வருகின்றனர். எனவே, பொதுமக்களின் நலன்கருதி, சிறு பாலம் மற்றும் ஏரிக்கரை மீது தார்ச்சாலை வசதி செய்து தரக்கோரி, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்து, நேற்று கிட்டன்கொட்டாய் கிராம மக்கள் நல்லம்பள்ளி பி.டி.ஓ., அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நல்லம்பள்ளி பி.டி.ஓ., நீலமேகம், கோரிக்கை குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்து, விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து, மக்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை