காவேரிப்பட்டணம் நகர் சந்திப்பில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் நகர் சந்திப்பு சாலையில், தினமும் தொடர் விபத்துகள் நடந்து வரும் நிலையில், அங்கு வேகத்தடை அமைக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கிருஷ்ணகிரி - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில், காவேரிப்பட்டணம் நகருக்குள் செல்லும் வகையில், மலையாண்டஹள்ளியில் பிரிவு சாலை உள்ளது. காவேரிப்பட்டணம் நகர், பழைய சேலம் ரோடு, வழியாக மீண்டும் தேசிய நெடுஞ்சாலையில் இப்பாதை இணைகிறது. இப்பகுதியில், திருமண மண்டபம், மருத்துவமனைகள் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த சாலைக்கு திரும்பும் இடத்தில், அதிவேகமாக வரும் வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது. கடந்த, 10 நாட்களில் இப்பகுதியில், 4க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்து, வங்கி பெண் மேலாளர் உயிரிழந்ததுடன், 5க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.இப்பகுதியில் வேகத்தடை அமைத்து விபத்துக்களையும், உயிரிழப்புகளையும் குறைக்க நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.