மைதானமின்றி ஆர்.டி.ஓ., அலுவலகம்: வாகனம் பதிவு செய்வோர் தவிப்பு
தர்மபுரி ;தர்மபுரி வட்டார போக்கு வரத்து அலுவலகத்திற்கு மைதானம் இல்லாததால், புதிய வாகன பதிவு, எப்.சி., மற்றும் லைசன்ஸ் பெற வருவோர் அவதி அடைந்து வருகின்றனர். தர்மபுரி மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் கலெக்டர் அலுவலகம் அருகே செயல்பட்டு வருகிறது.அதன் பின்புறம் இருந்த, 4.5 ஏக்கர் பரப்பிலான மைதானத்தில், புதிய வாகனங்களுக்கான பதிவு, எப்.சி., விபத்து வாகனங்கள் எம்.ஐ., காட்டுதல், லைசன்ஸ் பெறுவோர் வாகனத்தை ஓட்டி காட்டுதல் உள்ளிட்டவை நாள்தோறும் நடந்து வந்தது. இதில், 200க்கும் மேற்பட்ட புதிய வாகன பதிவு, 100 மேற்பட்டோர் லைசென்ஸ் பெறுவதற்காக பலர் வாகனங்களுடன் வந்து செல்கின்றனர்.தற்போது அந்த இடத்தில், புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால், ஆர்.டி.ஓ., அலுவலக மைதானத்திற்கு தற்போது இடம் இல்லை. தினசரி நடக்கும் புதிய வாகன பதிவு, எப்.சி.. லைசென்ஸ் பெறுவதற்காக வாகனம் ஓட்டுதல் உள்ளிட்டவை வெவ்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில், வாகன எப்.சி., மற்றும் லைசன்ஸ் பெற, தற்காலிகமாக, புதிய கலெக்டர் அலுவலகம் அருகே சிறிய இடத்தில் நடக்கிறது. இதில், போதுமான இடம் இல்லாததால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குக்கு செல்லும் சாலையில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. புதிய வாகனங்களுக்கான பதிவு அதியமான்கோட்டை அருகே, ரயில்வே மேம்பாலம் பகுதியில் நடந்து வருகிறது. இதனால், அதிகாரிகள், வாகன உரிமையாளர் மற்றும் புதிய வாகனம் பதிவு செய்வோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், தர்மபுரி ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு பணிபுரிந்து வந்த பிரேக் இன்ஸ்பெக்டர் தரணிதரண் கடந்த, 2 மாதத்திற்கு முன், அரூர் பகுதிக்கு மாற்றப்பட்டார். இதன் காரணமாக, தர்மபுரி பிரேக் இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக உள்ளது. அரூரில் பணிபுரியம் தரணிதரன் அரூரில், 2 நாள் தர்மபுரியில், 3 நாள் என பணிபுரிந்து வருகிறார். இதனால், தர்மபுரியில், புதிய வாகன பதிவு, எப்.சி., மற்றும் லைசென்ஸ் பணிகள் உள்ளிட்டவை வாரத்தில், 3 நாட்களில் மட்டும் நடக்கிறது. எனவே, ஆர்.டி.ஓ., அலுவலக பயன்பாட்டுக்கென புதிய மைதானம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன பதிவர் மற்றும் வாகன உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, தர்மபுரி ஆர்.டி.ஓ., ஜெய்தேவ்ராஜ் கூறுகையில், ''தர்மபுரியில் புதிய வாகன பதிவு, எப்.சி., மற்றும் லைசன்ஸ் உள்ளிட்ட பணிகளுக்கான மைதானம் இல்லாததால், சிறிய இடத்தில் செயல்பட்டு வருவது உண்மைதான். இது குறித்து, மாவட்ட நிர்வாகத்திடம் ஏற்கனவே தகவல் அளித்து, புதிய இடம் கேட்டுள்ளோம். மாவட்ட நிர்வாகமும் அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. விரைவில் மாற்றிடம் தேர்வு செய்யப்படும்,'' என்றார்.