போட்டி தேர்வு எழுதும் மாணவர்கள் 10 மணி நேரம் படிக்க அறிவுறுத்தல்
தர்மபுரி, தர்மபுரி விஜய்ஸ் டி.என்.பி.எஸ்.சி., அகாடமி சார்பில் மத்திய, மாநில அரசு பணி, பேங்கிங், ரயில்வே உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சி மையத்தின் சார்பில், அரசு போட்டி தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கான இலவச பயிற்சி வகுப்பு, தர்மபுரி நகரில் பென்னாகரம் மெயின் ரோடு ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆடிட்டோரியத்தில் நடந்தது. ஸ்ரீவிஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். தாளாளர் மீனா இளங்கோவன், இயக்குனர்கள் பிரேம், சினேகா பிரவீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சி மைய ஆலோசகர் மாதேஸ்வரன் வரவேற்றார். மூத்த முதல்வர் நாராயணமூர்த்தி சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார். நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற அரசு தலைமை செயலாளர் இறையன்பு மாணவ, மாணவியரிடையே பேசுகையில், ''அரசு போட்டி தேர்வை எதிர்கொள்ளும் மாணவ, மாணவியர் தன்னம்பிக்கையுடன் விடாமுயற்சியுடன் படித்தால் எளிதில் வெற்றி பெறலாம். குறைந்தபட்சம் ஒரு நாளில், 10 மணி நேரம் படிக்க வேண்டும். ஒரு மணி நேரத்தில், 50 நிமிடம் படித்து விட்டு, மீதி, 10 நிமிடத்தில் படித்ததை திருப்பி பார்க்க வேண்டும். அப்போது தான் நாம் படித்து எளிதில் புரியும். நல்ல எண்ணங்கள் மற்றும் சிந்தனைகள் மாறாமல் ஒழுக்கத்துடன் நன்றாக படித்தால் மட்டுமே போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற முடியும். ஏதோ படித்தோம், வேலைக்கு செல்வோம் என படிக்கக்கூடாது,'' என்றார். நிகழ்ச்சியில், 1,000க்கும் மேற்பட்ட போட்டி தேர்வர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி முதல்வர் ஜெயசீலன் நன்றி கூறினார்.