சுப்ரமணிய சிவா சர்க்கரை ஆலைக்கு கரும்பு வயலை பதிவு செய்ய அழைப்பு
அரூர்:தர்மபுரி மாவட்டம், சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு, பதிவில்லாத கரும்பு வயலை, பதிவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து, ஆலையின் மேலாண்மை இயக்குனர் பிரியா வெளியிட்டுள்ள அறிக்கை:பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2024 - 25 அரவை பருவத்தில், 1.16 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டு, தமிழகத்திலேயே முதலிடமாக, 10.43 சதவீத சராசரி சர்க்கரை கட்டுமானம் எய்தப்பட்டுள்ளது. நடப்பு அரவைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு, 3,532.80 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன், தமிழக அரசின் சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு, 349 ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆகவே, 2025 - 26 அரவைக்கு கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு, சிறப்பு ஊக்கத்தொகை, சர்க்கரை கட்டுமானம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு, டன் ஒன்றுக்கு, 4,100 ரூபாய்க்கு மேல் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, ஆலைக்கு பதிவு செய்யாமல் உள்ள கரும்பு விவசாயிகள், உடனடியாக சம்மந்தப்பட்ட கோட்ட கரும்பு அலுவலகங்களை தொடர்பு கொண்டு பதிவில்லாத கரும்பு வயலை, ஆலைக்கு பதிவு செய்யலாம். 2024 - 25 நடவு பருவத்தில் ஆலைக்கு பதிவு செய்துள்ள அங்கத்தினர்களுக்கு மத்திய, மாநில அரசின் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில், 55 லட்சம் ரூபாய் அங்கத்தினர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வரும், 2025 - 26 நிதியாண்டிற்கான மானியத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நடவிற்கு தேவையான விதை நாற்றுகள், விதை கரணைகள் ஆகியவற்றை சம்மந்தப்பட்ட கோட்ட கரும்பு அலுவலங்கள் மூலம் பெற்று நடவு செய்யலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளர்.