சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவக்கம்
அரூர், டிச. 29- தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில், நடப்பாண்டுக்கான, கரும்பு அரவை துவக்க விழா நேற்று நடந்தது. விழாவிற்கு, டி.ஆர்.ஓ., கவிதா தலைமை வகித்து அரவையை துவக்கி வைத்தார். ஆலையின் மேலாண்மை இயக்குனர் பிரியா, தர்மபுரி தி.மு.க.,-எம்.பி., மணி, அரூர் ஆர்.டி.ஓ., சின்னுசாமி, சர்க்கரை ஆலை அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். நடப்பு அரவைக்கு, சுப்ரமணிய சிவா கூட்டுறவு ஆலைக்கு, 5,139 ஏக்கரில் பதிவு செய்யப்பட்ட, 1.30 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு திட்டமிடப்பட்டுள்ளது. நடப்பாண்டு, அரவை செய்யப்படும் கரும்பிற்கு டன் ஒன்றிற்கு, 3,532.80 ரூபாய் வழங்கப்படும். வயல்களில் இருந்து, ஆலை அரவைக்கு கரும்பை கொண்டு வர, 75 லாரிகள், 53 டிராக்டர்கள், 30 டிப்பர் மற்றும், 22 டயர் மாட்டு வண்டிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கடந்த, 2023-24 அரவைப் பருவத்தில், ஆலைக்கு கரும்பு வழங்கிய, 4,166 விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு, சிறப்பு உற்பத்தி ஊக்கத் தொகையாக, டன் ஒன்றிற்கு, 215 ரூபாய் வீதம், 590.94 லட்சம் ரூபாய் அனுப்பப்பட்டு உள்ளதாக ஆலை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் புகார்அரவை துவக்க விழா குறித்து தங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என புகார் கூறிய விவசாயிகள், கரும்பு வெட்டுமாறு கூறிவிட்டு, நேற்று முன்தினம் மாலை லோடு ஏற்ற வேண்டாம் எனக் கூறியதுடன், கட்டிங் ஆர்டரும் வழங்கவில்லை. இதனால், நேற்று காலை முதல் வயலிலேயே டிராக்டர் டிரைலரில் கரும்பு இருப்பதாக வேதனையுடன் தெரிவித்தனர்.