அரூர் கடைவீதியில் தொடரும் போக்குவரத்து நெரிசலால் அவதி
அரூர்: அரூர் கடைவீதியில், ஜவுளிக்கடை, டிபார்ட்மென்ட் ஸ்டோர், எலக்ட்ரானிக்ஸ், மளிகை மற்றும் நகைக்கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவை அதிகளவில் உள்ளன. இதனால், கடைவீதி சாலையில் எப்போதும் மக்கள் கூட்டம் இருக்கும். கடைவீதி வழியாக செல்லும் பஸ், லாரி, சரக்கு வாகனங்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி வாகனங்களால் அப்பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. திங்கட்கிழமையில் நடக்கும் வாரச்சந்தையில், சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்படுகின்றன. அதேபோல், சாலையை ஆக்கிரமித்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் விளம்பர பலகைகைள் மற்றும் டூவீலர்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, வணிகர்கள், பொதுமக்கள் மற்றும் போலீசார் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் பலமுறை நடத்தப்பட்டும், இதுவரை நிரந்தர தீர்வு எட்டவில்லை. மேலும், போக்குவரத்து போலீசார் இருந்தும், நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில், அவர்கள் ஈடுபடாததால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில், போலீசார் ஈடுபடுவதுடன், அரூர் கடைவீதி வழியாக, பஸ், லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் செல்ல, தடை விதிக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.