சிறுவனை வெறிநாய் கடித்ததால் தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரம்
அரவக்குறிச்சி,பள்ளப்பட்டியில், பள்ளி க்கு சென்று கொண்டிருந்த, 10 வயது சிறுவனை வெறிநாய் கடித்து குதறியதால், நகராட்சி சார்பில் முதல் கட்ட நடவடிக்கையாக தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கியுள்ளது.பள்ளப்பட்டி, செல்லுமீரான் பகுதியை சேர்ந்த தமீமுன் அன்சாரி என்ற, 10 வயது சிறுவன் கடந்த திங்கட்கிழமை காலை பள்ளிக்கு நடந்து சென்றபோது, வெறிநாய் ஒன்று சிறுவனை துரத்தி துரத்தி கடித்துள்ளது. அருகில் இருந்தவர்கள் நாயை துரத்தி விட்டு, காயமடைந்த சிறுவனை கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.இந்நிலையில், மக்களின் தொடர் கோரிக்கை மற்றும் சிறுவனை வெறி நாய் கடித்த சம்பவம் ஆகியவற்றால், பள்ளப்பட்டி நகராட்சி நிர்வாகம் முதற்கட்ட நடவடிக்கையை துவக்கியுள்ளது. அதன்படி, நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து, தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. பள்ளப்பட்டி கால்நடை உதவி மருத்துவர் மதிஇளம்பரிதி, தெருவில் சுற்றி தெரியும் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தினார். இப்பணியை நகராட்சி கமிஷனர் ஆர்த்தி, நகராட்சி தலைவர் முனவர் ஜான், சுகாதாரத்துறை ஆய்வாளர் முகமது இஸ்மாயில் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.