குடிநீர் கேட்டு மொபைல் டவரில் ஏறி தொழிலாளி போராட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் யூனியனில், 25 ஊராட்சிகள் உள்ளன. இதில் கோபிசெட்டிபாளையம் ஊராட்சியில் உள்ள துறிஞ்சிப்பட்டியில், 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களுக்கு கடந்த, 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்காததால், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். குடிநீரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். அதே கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல், 45, குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சி செயலரிடம் முறையிட்டுள்ளார். ஆனால் குடிநீர் வழங்க நடவடிக்கை இல்லாததால், மது போதையில் இருந்த சக்திவேல், குடிநீர் வழங்காததை கண்டித்தும், குடிநீர் வழங்கக்கோரியும், அப்பகுதியிலுள்ள, 150 அடி உயர மொபைல்போன் டவரில் நேற்று மதியம், 2:30 மணியளவில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரகாசம் தலைமையிலான வீரர்கள் டவரில் ஏறி, 2 மணி நேர போராட்டத்திற்கு பின் கயிறு கட்டி, அவரை பத்திரமாக கீழே இறக்கினர்.