புத்தகம் வாசிப்பை பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்
கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும், 14வது புத்தக திருவிழா ஓசூரில் நடந்து வருகிறது. நேற்று நடந்த நிகழ்வில், தமிழ்நாடு லோக் ஆயுக்தா நீதிபதி ராமராஜ் பேசியதாவது:கடந்த, 200 ஆண்டுகளில் ஏராளமான புத்தகங்கள் உலகம் முழுவதும் வெளிவந்துள்ளன. தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் வெளி வருகின்றன. தனித்துவமான புத்தகங்கள், நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் மற்றும் ஆராய்ச்சி இதழ்கள் என்று பல்வேறு வகைகளாக பிரிக்கலாம். ஒவ்வொரு ஆண்டும், 22 லட்சம் முதல், 24 லட்சம் அச்சு புத்தகங்கள், மின்புத்தகங்கள், ஆடியோ புத்தகங்கள் வெளியிடப்படுகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும், ஒரு லட்சம் வரை புதிய தலைப்புகளை வெளியிடுவதாகவும், தமிழ்நாட்டில், 5,000 புதிய தமிழ் புத்தகங்களும் 1,000 புத்தகங்களின் மறு பதிப்புகளும் வெளியிடப்படுகின்றன. பள்ளியில் காலடி எடுத்து வைத்தது முதல், இறக்கும் வரை மனிதனுக்கு புத்தகம் சிறந்த நண்பனாகும். புத்தக வாசிப்பை எப்போதும் பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். புத்தகங்கள், நாளிதழ்களை தொடர்ந்து படிப்பதன் மூலம் அரசியலமைப்பையும், பொது சட்டங்களையும் அறிந்து கொள்ள முடியும்.இவ்வாறு பேசினார்.