| ADDED : ஜூலை 23, 2024 05:49 AM
குஜிலியம்பாறை: திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் 100 நாள் வேலை திட்ட பணிகளுக்கு சம்பளமாக மத்திய அரசு தினமும் ரூ.319 அறிவித்துள்ள நிலையில் இன்னும் ரூ.270 தாண்டி வழங்கவில்லை என்ற குமுறல் எழுந்துள்ளது. கிராம மக்களின் நலன் கருதி மத்திய மாநில அரசுகள் இணைந்து 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் குளம்,வரத்து வாய்க்கால் துார்வாருதல், ரோட்டோர முட்புதர்களை அகற்றுதல், மரக்கன்று நடுதல், பராமரித்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றன . பெரும்பாலான ஊராட்சிகளில் இந்த பணிகள் நடைபெறுவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், தொழிலாளர்கள் பணியை கவனிக்காமல் கூட்டமாக உட்கார்ந்து கதை பேசி செல்வதாக ஒருபுறம் குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் 100 நாள் வேலை திட்டத்தை மத்திய அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. தொழிலாளர்களை வேளாண் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து எழுந்து வருகிறது. ஆனால் அதற்கான சாத்திய கூறுகள் இன்னும் முழுமை அடையவில்லை. இந்நிலையில் மத்திய அரசு அறிவித்தபடி 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கான சம்பளம் ரூ.319 ஐ தினக்கூலியாக ரூ.319 வழங்கினாலும், மாநில அரசு 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு ரூபாய் 270 தான் வழங்கி வருகிறது என்கின்றனர். தொழிலாளர்களின் நலன் கருதி மத்திய அரசு அறிவித்துள்ளபடி ரூ.319 ஐ., வழங்க வேண்டும்.அதே நேரத்தில் போதிய வேலையையும் வாங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.............முறையாக வழங்குங்க ஜனவரி 2024 மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டில் 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ. 319 அறிவித்தது. ஆனால் இன்று வரை தினக்கூலியாக ரூ.270 தான் வாங்குகின்றனர். தற்போது விற்கும் விலைவாசி உயர்வு காரணமாக பெரும்பாலான மக்கள் பொருளாதாரத்தின் சிரமத்தில் காலத்தை கழிக்கின்றனர். இதை நம்பித்தான் சாமானிய மனிதன் வாழ்கிறான். தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காலத்தில் மத்திய அரசு அறிவித்த தினக்கூலி ரூ. 319 ஐ., மாவட்ட நிர்வாகங்கள் முறையாக வழங்க வேண்டும். ஏ.ராஜரத்தினம், மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர், குஜிலியம்பாறை .