உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / உயிர்ம வேளாண்மையில் 6845 ஏக்கர் விவசாய நிலங்கள் பதிவு 

உயிர்ம வேளாண்மையில் 6845 ஏக்கர் விவசாய நிலங்கள் பதிவு 

திண்டுக்கல்: ''தமிழகத்திலேயே திண்டுக்கல் மாவட்டத்தில் தான் உயிர்ம வேளாண்மையில் 6845 ஏக்கர் விவசாய நிலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக'' விதை சான்றளிப்பு, உயிர்ம சான்றளிப்புத்துறை உதவி இயக்குநர் சின்னசாமி தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு துறையின் பங்களிப்பு

சான்று பெற்ற விதைகளை தங்கு தடையின்றி உரிய பருவ காலத்தில் விவசாயிகளுக்கு கிடைக்க வைப்பதோடு தரத்தில் சமரசம் செய்து கொள்ளாமல் விநியோகம் செய்வதுதான் முதல் பணி. விவசாயிகள் தரமான விதைகளை பயிரிடுவதன் மூலம் மகசூல் அதிகரிக்கும். விவசாயிகளுக்கு நல்ல முளைப்புத்திறன் கொண்ட விதைகள் சென்றடைவதை உறுதி செய்வது போன்ற பணிகளை மேற்கொள்கிறோம். உயிர்ம சான்றளிப்பின் மூலம் இயற்கை விவசாயம் வழியே மண்ணுயிர் காப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.

உயிர்ம சான்றளிப்புத்துறை மூலம் கிடைக்கும் பயன்

விவசாயிகள் தங்களுடைய விளைநிலங்களில் பூச்சிக்கொல்லி, கலைக்கொல்லி போன்ற மருந்துகள், ரசாயன உரங்களின் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்த்து இயற்கை முறையில் சாகுபடி செய்ய வேண்டும். மண்ணையும், சுற்றுச்சூழலையும் பாதுகாத்தால் பயிரும், மனிதனும் ஆரோக்கியமாக இருக்க முடியும். இயற்கை விவசாயப் பொருட்களின் மூலமாக கூடுதல் லாபம் பெற முடியும். அதேநேரத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தும் கூடுதல் லாபம் பெற முடியும். இதற்காக பல்வேறு பயிற்சிகள், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

பூச்சிக்கொல்லி, கலைகொல்லி மருந்துகளை பயன்படுத்துகின்றனரே...

இதுபோன்ற மருந்துகளை பயன்படுத்துவதால் அதன்மூலம் பெறப்படும் விளைபொருட்கள் உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது. இதனை தவிர்த்து இயற்கை விவசாயித்திற்கு மாற வேண்டும். இவற்றை தவிர்க்க பசுந்தாள், தழை உரங்கள், மாட்டு சாணம், தொழு உரங்கள் போன்றவற்றை பயன்டுத்தும் போது உற்பத்தி செலவு குறைவதோடு, மண் ,மக்களின் ஆரோக்கியத்தை பேணிக்காக்க முடியும்.

உயிர்ம வேளாண்மை பதிவு, சான்றிதழ் பயன்...

தமிழகத்திலேயே உயிர்ம வேளாண்மையில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டத்தில் தான் 6,845 ஏக்கர் விவசாய நிலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய உயிர்ம உற்பத்தி திட்டம் , பங்கேற்பு உத்தரவாத திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. தேசிய உயிர்ம உற்பத்தி திட்டத்தின் படி வெளிநாடுகளுக்கும் ஏற்றமதி செய்யலாம். இதற்கு பதிவுக்கட்டணம் உண்டு. பங்கேற்பு உத்தரவாத படி உள்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்ய முடியும். எந்தவித கட்டணமுமின்றி சான்றிதழ் பெறலாம்.

உயிர்ம சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் தேவை

3 நகல்களுடன் ஒரு விண்ணப்பப்படிவம், பண்ணையின் பொதுவிவரக்குறிப்பு, வரைபடம், மண் , பாசன நீர் பரிசோதனை விவரம், ஆண்டு பயிர்த்திட்டம், துறையுடனான ஒப்பந்தம், சிட்ட நகல், பான், ஆதார் கார்டு, போட்டோவுடன் விண்ணப்பிக்கலாம்.

தேசிய உற்பத்தி திட்டத்தில் பதிவு வழி...

இயற்கை விளை பொருட்களை விற்பனை செய்ய தேசிய உயிர்ம உற்பத்தி திட்டத்தின்படி இயற்கை வேளாண் சான்று வழங்கப்படுகிறது. இச்சான்று பெற தனி நபர், குழுவாக பதிவு செய்யலாம். பெரு வணிக நிறுவனங்கள், இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை மதிப்பு கூட்டுவோர், வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள் பதிவு செய்யலாம். தனி நபர் சிறு, குறு விவசாயிகள் எனில் ரூ.2700, தனி நபர் (பிற விவசாயிகள்) ரூ.3200, குழுவுக்கு ரூ. 7200, வணிக நிறுவனங்கள் ரூ.9200 கட்டணம் செலுத்த வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ