கிரேன் மூலம் மரம் ஏற்றுவதால் போக்குவரத்தில் பெரும் பாதிப்பு
தாண்டிக்குடி: கன்னிவாடி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆடலுார் பகுதியில் ஏராளமான இடங்களில் வனத்துறை மரங்கள் வெட்ட அனுமதி அளித்துள்ளது. வெட்டப்பட்டுள்ள மரத்துண்டுகள் லாரிகள் மூலம் ஏற்றி செல்வதற்கு சம்பந்தப்பட்ட நிலங்களில் இருந்தே ஏற்றப்படவேண்டுமென்ற விதிமுறை உள்ளது. இருந்த போதும் மெயின் ரோட்டோரங்களில் மரங்களை குவித்து ரோடுகளை சேதப்படுத்தும் நிகழ்வு தொடர்கிறது.குவிக்கப்பட்டுள்ள மரத் துண்டுகளை ரோட்டில் கிரேன்கள் மூலம் லாரியில் ஏற்றுவதால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.நாள்தோறும் இதுபோன்று நடப்பதால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர்.வனத்துறையும் இது குறித்து நடவடிக்கை எடுப்பதில்லை. மாறாக நெடுஞ்சாலைத்துறையும் கண்டுகொள்ளாத நிலை உள்ளது.கன்னிவாடி ரேஞ்சர் ஆறுமுகம் கூறுகையில்,'' மரங்கள் வெட்டப்படுவதற்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளோம். ரோட்டோரம் மரங்களை குவித்து லாரிகளில் கிரேன் மூலம் ஏற்றுவதை கண்காணிக்கும் வேலை வனத்துறைக்கு இல்லை'' என்றார்.