அய்யலுாரில் நுாலகம் தேவை
வடமதுரை: அய்யலுார் பேரூராட்சிக்குள் 30 குக்கிராமங்கள் உள்ளன. விவசாயமே முக்கிய தொழிலாக நடக்கும் இப்பகுதியில் பள்ளி கல்விக்கு அடுத்த கட்டமாக மேல் படிப்புகளுக்காக பலரும் திருச்சி, திண்டுக்கல் என நீண்ட துாரம் செல்ல வேண்டியுள்ளது. விடுமுறை நாட்களில் பொது அறிவு, நாட்டு நடப்பு நிகழ்வுகளை தெரிந்து கொள்ளவும்,போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு நுாலகம் இல்லாதது பெரும் சிரமத்தை தருகிறது. மணியகாரன்பட்டி சமூக ஆர்வலர் பாதர்வெள்ளை கூறுகையில், இப்பகுதி இளைஞர்கள் நாளிதழ்கள், தேவையான புத்தகங்கள் படிக்க வடமதுரை நுாலகத்திற்கே செல்ல வேண்டியுள்ளது. இதனால் கிராமங்களில் வசிப்போருக்கு போக்குவரத்து சிரமமும், செலவும் கூடுதல் சுமையாகிறது. பல அரசு துறைகளிலும் நுாலக வரி என்ற பெயரில் வசூலிக்கப்படும் நிலையிலும் அய்யலுாரில் நுாலகம் இல்லாதது வருத்தம் தரும் விஷயம். அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.