| ADDED : மே 20, 2024 06:33 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் பல இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தநிலையில் மக்கள் குளிர்ச்சியடைந்தனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று மற்றும் இன்று என 2 நாட்கள் அதிக அளவில் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி, நேற்று காலை வெயில் அடித்தாலும் மதியம் 2:00 மணிக்கு மேல் மேகமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. மாலை 4.30 மணிக்கு துாரலுடன் பெய்த மழை இரவு வரை தொடர் மழையாக நீடித்தது. கனமழையாக பெய்யாமல் லேசான மழையாக 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்தது. அவ்வப்போது லேசான மழை பெய்தது. நேற்று மாலை 4:30 மணிக்கு வானம் இருண்டு பலத்த காற்று வீசத் துவங்கியது. இதனைத் தொடர்ந்து இடியுடன் பலத்த மழை பெய்தது.ஒட்டன்சத்திரம், தங்கச்சியம்மாபட்டி காந்தி மார்க்கெட் சாலைப்புதுார், அத்திக்கோம்பை காளாஞ்சிபட்டி கொத்தையம், அப்பியம்பட்டி, நால்ரோடு சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் மாலை 6:00 மணி வரை கனமழை பெய்தது.பழநி: பழநியில் பகுதிகளில் இரு நாட்களாக மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைந்தது. இந்நிலையில் நேற்று பழநி பகுதிகளில் மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ரோடுகளில் தண்ணீர் தேங்கி ஓடியது. வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். இரண்டு மணி நேரத்திற்கு மேல் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், விடுமுறை நாளை முன்னிட்டு கோயிலுக்கு வந்த வெளியூர் பக்தர்கள் அவதிப்பட்டனர்.