உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நிச்சயமற்ற அரசு பஸ்கள் சேவையால் பாதிப்பு செம்பட்டி, கன்னிவாடி, ரெட்டியார்சத்திரம் மாணவர்கள் அவதி

நிச்சயமற்ற அரசு பஸ்கள் சேவையால் பாதிப்பு செம்பட்டி, கன்னிவாடி, ரெட்டியார்சத்திரம் மாணவர்கள் அவதி

கன்னிவாடி: செம்பட்டி, கன்னிவாடி, ரெட்டியார்சத்திரம் பகுதிகளில் பள்ளி நேர அரசு பஸ்கள் அடிக்கடி டிரிப்-கட் செய்யப்படுகின்றன. போக்குவரத்து துறை அதிகாரிகள் அலட்சியத்தால் , பள்ளி, கல்லூரி மாணவர்கள், கூலித்தொழிலாளிகள் அவதிக்குள்ளாகின்றனர்.ஆத்துார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட கிராமங்களுக்கு ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் கிளை 2, கிளை 3 ஆகிய டெப்போக்களில் இருந்து அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகின்றன. விவசாய தொழிலை அடிப்படையாக கொண்ட கிராமங்களில் அரசு டவுன் பஸ் சேவையே முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள கூலித்தொழிலாளர்கள், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், வத்தலகுண்டு, சின்னாளபட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்கு செல்வதற்காக அரசு டவுன் பஸ் சேவையை நம்பி உள்ளனர். சில மாதங்களாக பரவலாக ரோடு, பாலங்கள் சீரமைப்பு பணிகளை மாநில நெடுஞ்சாலை துறை துவங்கி உள்ளது. பாலம் பணி மேற்கொள்ளப்படும் பகுதிகளில் துணை பாதை வசதி ஏற்படுத்துவதில்லை. பணிகளும் பல வாரங்களுக்கு கிடப்பில் விடப்பட்டுள்ளன. இதனால் சம்பந்தப்பட்ட வழித்தடத்தில் அரசு பஸ்கள் முன்னறிவிப்பின்றி நிறுத்தப்படுகின்றன. பல கிராமங்களில் பஸ் சேவை துண்டிக்கப்படுவதும் மக்கள் அவதிக்குள்ளாவதும் வாடிக்கையாகி வருகிறது.பல வழித்தடங்களில் பஸ்களை இயக்குவதை போக்குவரத்து அதிகாரிகள் கண்காணிக்காததால் அடிக்கடி டிரிப்-கட் செய்யப்படும் நிலை தொடர்கிறது. புறநகர் பஸ் வசதி உள்ள மெயின் ரோட்டில் செல்லும் டவுன் பஸ்களை விட கிராமங்களுக்கு செல்லும் பஸ்களின் இயக்கத்தை முடக்குகின்றனர். சிறப்பு பஸ்களின் வெளியூர் பயணத்திற்காக கிராம பஸ்களை மாற்றி அனுப்புகின்றனர்.அதிகாரிகள் அலட்சியம் மட்டுமின்றி ஊழியர்களின் தன்னிச்சையான செயல்பாடுகளால் மகளிர், கூலித் தொழிலாளர்கள், முதியோர் பாதி வழியில் இறக்கி விடப்படும் அவலமும் தொடர்கிறது. மாவட்ட நிர்வாகம் அரசு டவுன் பஸ்கள் இயக்கத்தில் நிலவும் குளறுபடிகளை நீக்கி கிராமங்களுக்கான தடையற்ற சேவையை வழங்க வேண்டும்.

அவதிக்குள்ளாகும் பயணிகள்

ராமச்சந்திரன், பா.ஜ., விவசாய அணி ஒன்றிய தலைவர், கெம்மனம்பட்டி : இரவு நேர கடைசி டிரிப்பில் கிராம அரசு டவுன் பஸ்களை டிரைவர், கண்டக்டர்கள் விருப்பத்திற்கேற்ப இயக்குவது , முழுமையாக நிறுத்தி விடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். பெண் கூலி தொழிலாளர்கள், தினமும் வேலைக்கு சென்று திரும்ப முடியாமல் அவதிப்படுகின்றனர். புதுச்சத்திரம் ஊராட்சி சட்டயப்பனுார் வழியே 3 மாதங்களாக ரோடு பணி நடப்பதாக அரசு பஸ் சேவையை நிறுத்தி விட்டனர். பணியும் நடக்கவில்லை. தனியார் வாகனங்கள் வழக்கம்போல இயங்குகிறது. போக்குவரத்து வசதிக்காக பயணிகள் மூலச்சத்திரத்திற்கு அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். திண்டுக்கல் -ரெட்டியார்சத்திரம் வழித்தடத்தில் தனியார் பஸ்களுக்கு ஏதுவாக அரசு பஸ் இயக்கத்தை தடை செய்து திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்தில் இருந்து வேறு பகுதிகளுக்கு அனுப்புகின்றனர்.

அதிகாரிகள் அலட்சியம்

ரா.ரமணா,கல்லூரி மாணவர், செம்பட்டி : செம்பட்டி-ஒட்டன்சத்திரம் வழித்தடத்திலான பெருமளவு புறநகர் பஸ்கள் திண்டுக்கல் பைபாஸ் ரோடு வழியே செல்கின்றன. தனியார் பஸ்களுக்கு ஏதுவாக பல அரசு டவுன் பஸ் டிரிப்களை காலை, மாலை நேரங்களில் நிறுத்திவிட்டனர். மாணவர்கள் விபத்து அபாய நிலையில் சரக்கு வாகனங்கள், தனியார் பஸ்களில் படியில் தொங்கியபடி பயணிக்கின்றனர். உடல்நல குறைவு பிரச்னைகளும் ஏற்படுகிறது. பள்ளி நேர டவுன் பஸ்களை தடையின்றி இயக்க ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் கிளை 2, 3 டெப்போக்களின் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பஸ்கள் இயக்கத்தில் அடிக்கடி முன்னறிவிப்பின்றி தடை ஏற்படுத்துகின்றனர்.

கண்காணிப்பு தேவை

மோகன், பேரூராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர், கன்னிவாடி: கன்னிவாடியில் 5.9 கோடி ரூபாயில் கட்டப்பட்ட நவீன பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டு பல மாதங்களாகிறது. போக்குவரத்து கழக அதிகாரிகள் அலட்சியத்தால் பெரும்பாலான டவுன், புறநகர் பஸ்கள் இங்கு வருவதை தவிர்க்கின்றன. செம்பட்டி வழித்தடத்தில் இயங்கி வந்த 100க்கு மேற்பட்ட வெளிமாவட்ட புறநகர் பஸ்கள், திண்டுக்கல் பைபாஸ் ரோடு வழியாக செல்கின்றன. செம்பட்டி, கன்னிவாடி பஸ் ஸ்டாண்ட்களில் காத்திருக்கும் பயணிகள் அலைக்கழிப்பு என அவதிப்பட்டு வருகின்றனர். அனைத்து புறநகர் பஸ்களும் கன்னிவாடி பஸ் ஸ்டாண்ட் வந்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச்னையில் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகளின் கண்காணிப்பு நடவடிக்கை மட்டுமே தீர்வுக்கு வழி வகுக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை